Friday, October 31, 2014

பெண்+காமம்+கணிதம் = கவிதை


கருமேகம் எழுந்ததடி - உந்தன்
இருங்குழலில் எழுந்ததடி
செந்நுதலில் முத்தமடி - உனை
வேண்டுகிறேன் நித்தமடி
மான்விழிகள் மின்னுதடி - ஒரு
மீன்வலையைப் பின்னுதடி
நாசியினின் காற்றுவடி - என்
பசியினது ஊற்றுவடி
பஞ்சனைய கன்னமடி - அதைக்
கெஞ்சுகுது எண்ணமடி
இதழினின்று தேனியடி - அது
உறிஞ்சுகுது தேனையடி
தேனிபோல நானுமடி - அதில்
தேன்முகந்தான் நாணுமடி
சங்கினைக் கை வளைக்குதடி - நம்
தங்குலகைக் கலைக்குதடி
மலர்க்கரங்கள் தழுவுதடி - மனக்
கலக்கமெல்லாம் நழுவுதடி
கவிழ்த்துவைத்த கவளமடி - அதன்மேல்
கவின்மிகுந்த பவளமடி
பட்டுத்துணி தீண்டுதடி - பட்டு
விளையாடத் தூண்டுதடி
மென்தகடு தாக்குதடி - மனம்
மஞ்சமாக கேக்குதடி
ஏற்றமிகு எழுச்சியடி - அதில்
தோற்றிடுது கவர்ச்சியடி
பாதமெனைக் கண்டதடி - உளம்
மாதவத்தை வேண்டுதடி
காலிரண்டும் வாழையடி - நான்
அதன்முன்னே கோழையடி
பனைத்தொடைகள் பட்டதடி - உச்ச
உணர்வுகளைத் தொட்டதடி
புகையொத்த இடைகளடி - என்மேல்
எடுக்கிறது படைகளடி
அஞ்சிறைகள் விரிந்ததடி - மனம்
வெஞ்சிறையில் சேர்ந்ததடி
ஈருடலும் பிணைந்ததடி - நாம்
ஓருயிராய் இணைந்தமடி
அணைகளெல்லாம் உடைந்ததடி - வெள்ளம்
கரைகளெல்லாம் கடந்ததடி
மகரந்தம் சேர்ந்ததடி - சிறு
பிஞ்சொன்று உதிர்ந்ததடி

விடுபட்ட வரிகள் (Edited.. not censored):
கனியில் கிளி தத்துமடி - அதைப்
பருந்து வந்து கொத்துமடி
பருந்து எந்தன் சாதியடி - பின்
கிளியும் நீயும் மீதியடி
சந்தனத்தில் தேகமடி - நான்
மீட்டுகிறேன் ராகமடி
மலரணிகள் பட்டதடி - மனம்
உச்சநிலை தொட்டதடி
படிப்படியாய் இறக்கமடி - அதில்
அடிமனதில் கிறக்கமடி
தடைகளெல்லாம் விலகுதடி - நாம்
கலப்பதினி இலகுவடி
நனவுலகு உடையுதடி - மனம்
கனவுலகை அடையுதடி
மாம்பழத்தில் கன்னமடி - கண்டு
சிதறிடுமென் எண்ணமடி
மொட்டு ஒன்று சிரிக்குதடி - என்
மனதைத்தொட்டுப் பறிக்குதடி
பாலில்பழம் உதித்ததடி - இதழ்
முத்திரையைப் பதித்ததடி
சிரிக்கும் மொட்டைப் பார்த்ததடி - உடன்
உடலெங்கும் வேர்த்ததடி